புதுச்சேரியில் மருத்துவர் வீட்டில் 150 பவுன் நகைகள் திருட்டு

புதுச்சேரியில் மருத்துவர் வீட்டில் 150 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் மருத்துவர் வீட்டில் 150 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 புதுச்சேரி தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரைச் சேர்ந்தவர் வடிவேல் பண்டாரி (67). மருத்துவர். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருமே மருத்துவர்கள். இவர்களுக்குச் சொந்தமான மருத்துவமனை லாஸ்பேட்டையில் உள்ளது.
 3 மகள்கள் தங்களது கணவர்களுடன் வெளிநாட்டிலும், மகன் தில்லியிலும் வசித்து வருவதால், மருத்துவமனையை தனியாக நடத்த முடியாத வடிவேல் பண்டாரி, வேறு நபருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.
 இதனிடையே, பொங்கல் பண்டிகை மற்றும் உறவினர் திருமணத்துக்காக வெளிநாட்டிலிருந்து கடந்த மாதம் புதுச்சேரி வந்திருந்த மகள்களுக்காக, வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்த சுமார் 150 பவுன் தங்க நகைகளை வடிவேல் பண்டாரி எடுத்து வந்தார். திருமண விழா முடிந்ததும், நகைகளை இங்குள்ள வீட்டிலேயே வைத்துவிட்டு அவரது மகள்கள் வெளிநாட்டுக்குச் சென்று விட்டனர். அந்த நகைகளை மீண்டும் வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கலாம் என வடிவேல் பண்டாரி உத்தேசித்திருந்தார்.
 இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வடிவேல் பண்டாரி தனது மனைவியுடன் வழக்கம்போல, பிரதான கதவுகளைப் பூட்டிவிட்டு, வீட்டின் முதல் தளத்தில் இருந்த அறையில் தூங்கினார். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது, பீரோக்கள் திறக்கப்பட்டு, துணிகளும், கவரிங் நகைகளும் சிதறிக் கிடந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த வடிவேல் பண்டாரி பீரோவைப் பார்த்துபோது, அதிலிருந்த 150 பவுன் தங்க நகைகளையும், ரூ. 2.5 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
 இதுகுறித்து அவர் தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 விரல்ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களைச் சேகரித்தனர். முதல் கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் கதவுகள் எதையும் உடைக்காமல் காற்றுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த பால்கனி வழியாக உள்ளே நுழைந்து, அதிலேயே வைக்கப்பட்டிருந்த சாவியால் பீரோவை திறந்து தங்க நகைகளை எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. தெரிந்தவர்கள் மட்டுமே இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், போலீஸார் வீட்டு வேலைக்காரர்கள், வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகில் உள்ள வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் வைத்து விசாரிக்கின்றனர்.
 இதனிடையே, திருட்டு நடந்த வீட்டை முதுநிலை எஸ்.பி. அபூர்வ குப்தா பார்வையிட்டார். மேலும், திருட்டில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க 2 தனிப் படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com