சுடச்சுட

  

  "புதுச்சேரியில் பிச்சாவரம்' சுற்றுலா திட்டம் விரைவில் அறிமுகம்

  By DIN  |   Published on : 11th July 2019 01:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Pichavaram_trees2

  "புதுச்சேரியில் பிச்சாவரம்' என்ற புதிய சுற்றுலா திட்டத்தை புதுவை அரசின் சுற்றுலாத் துறை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
  புதுச்சேரியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளில் சுற்றுலாத் துறை தீவிரமாக  இயங்கி வருகிறது. இதன் எதிரொலியாக, புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 
  கடந்த காலங்களில் புதுச்சேரி கடற்கரைச் சாலை உள்ளிட்ட ஒரு சில இடங்கள் மட்டுமே சுற்றுலா பகுதிகளாக திகழ்ந்தன. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஓரிரு நாள்களிலேயே பயணத்தை முடித்துக் கொண்டு புறப்படும் நிலை இருந்தது. 
  இதையடுத்து, புதிய இடங்களை அடையாளம் கண்டு சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் பணிகளில் சுற்றுலா துறை கவனம் செலுத்தி வருகிறது.
  காலாப்பட்டு,  திப்ராயப்பேட்டை,  அரிக்கன்மேடு,  சின்ன வீராம்பட்டினம்,  நரம்பை,  மணப்பட்டு,  சுண்ணம்பாற்றின் தெற்கு பகுதி ஆகிய இடங்களில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு,  மெரினா கடற்கரை,  ஈடன் கடற்கரை,  டெம்பிள் கடற்கரை போன்ற பெயர்களில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  இந்த நிலையில், இயற்கை சார்ந்த சுற்றுலாவின் ஒரு பகுதியாக, தேங்காய்த்திட்டு பகுதியில் "மாங்குரோவ் காடுகள்' என்று அழைக்கப்படும் அலையாத்திக் காடுகளுக்கு மத்தியில் படகு சவாரி அழைத்துச் செல்வதற்கு சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.
  இந்தப் புதிய திட்டத்துக்கு "புதுச்சேரியில் பிச்சாவரம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக படகுகள் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை இயக்குநர் முகமது மன்சூர் உள்ளிட்ட அதிகாரிகள்  படகுகளில் சென்று அலையாத்திக் காடுகளைச் சுற்றிப் பார்த்துள்ளனர். தேங்காய்த்திட்டு முகத்துவாரப் பகுதியில் தொடங்கி பல கி.மீ. தொலைவுக்கு அலையாத்திக் காடுகள் செழித்து வளர்ந்துள்ளன.  நூற்றுக்கணக்கான ஏக்கரில் பச்சைப் பசேல் என பரந்து விரிந்துள்ள அலையாத்திக் காடுகளில் செங்கால் நாரை உள்ளிட்ட பல்வேறு வகையான நாரைகள், பல வகையான கொக்குகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் முகாமிட்டுள்ளன.
  முருங்கப்பாக்கத்தில், அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரத்தில் கலை மற்றும் கைவினை கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து அரியாங்குப்பம் ஆற்றின் 
  வழியாகப் படகில் அரிக்கன்மேட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து தேங்காய்த்திட்டு பகுதியில் பரந்து விரிந்துள்ள அலையாத்திக் காடுகளுக்கு மத்தியில் படகு சவாரி நீள்கிறது. 
  நகரப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகளுக்கு நடுவில் படகு சவாரி மேற்கொள்வது சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai