எதிர்ப்பைக் கண்டு அஞ்ச வேண்டாம்: பிரதமரின் அறிவுறுத்தலால் கிரண் பேடி உற்சாகம்
By DIN | Published On : 12th July 2019 08:36 AM | Last Updated : 12th July 2019 08:36 AM | அ+அ அ- |

எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் மக்கள் பணியில் கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை தனது கட்செவி அஞ்சலில் அவர் வெளியிட்ட பதிவு: கடந்த மூன்று ஆண்டுகளாக புதுவை ஆளுநர் மாளிகையில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினேன். ஆளுநர் மாளிகையின் முழுமையான செயல்பாடுகள் குறித்தும் அவரிடம் தெரிவித்தேன்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். இதற்காக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகிறோம். கட்செவி அஞ்சல், மின்னஞ்சல், கட்டுப்பாட்டு அறை எண்கள், ஆளுநர் மாளிகையில் மக்கள் குறைதீர் கூட்டம், பார்வையாளர்களுக்கு நேரம் ஒதுக்குவது, வார இறுதி நாள்களில் கள ஆய்வுப் பணிகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கினேன். இவ்வாறான பணிகளை அமைச்சர்களும், அரசுத் துறைத் தலைவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருவதையும் பிரதமரிடம் விளக்கினேன்.
இது நிர்வாகத்தின் சிறந்த நலனுக்காகவும் இருக்கும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தானாக முன்வந்து இது செய்யப்பட வேண்டும்.
இந்த நம்பகத் தன்மை வாய்ந்த பதிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக உள்ளது. இதன் மூலம் மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை, அணுகுமுறைகளைத் திருத்திக் கொள்ள அரசுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. இதன் மூலம் கால தாமதமும் தடுக்கப்படுகிறது. அரசின் நிர்வாகம் என்பது மக்களுக்குச் சேவை செய்வதாகும்.
எனவே, அதுகுறித்த தகவல்களை மக்களுடன் பகிர்வதால், அவர்களிடமிருந்து கூடுதல் ஒத்துழைப்பும் அரசுக்குக் கிடைக்கும். இந்த விவகாரத்தில் எதிர்தரப்பினரின் எதிர்ப்பு, விமர்சனம் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், அவர்களுக்கும் இதில் பங்குண்டு. விமர்சனம் ஆக்கப்பூர்வமான இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடாது. என்னுடைய விளக்கங்களைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கான பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என ஊக்கப்படுத்தியது எனக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் கிரண் பேடி.