மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை  உறுதி செய்தால் மட்டுமே புதிய வீடு கட்ட அனுமதி: புதுவை முதல்வர் அறிவிப்பு

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உறுதி செய்தால் மட்டுமே புதிய வீடு கட்ட அனுமதி வழங்கப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உறுதி செய்தால் மட்டுமே புதிய வீடு கட்ட அனுமதி வழங்கப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைச் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான் தலைமை வகித்தார்.
புதுவை முதல்வர் வே.நாராயணசாமி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளைச் செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. புதுவை மாநிலத்தில் நிலத்தடி நீர் ஓரளவு உள்ளது. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதன் மூலம், நீர் மட்டம் கீழே சென்றுவிட்டது. இந்த நிலை நீடித்தால், எதிர்காலத்தில் நிலத்தடி நீரே இல்லாத நிலை ஏற்படும். அப்போது, குடி நீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைக்காமல் பாதிப்பு உண்டாகும்.
எனவே, புதிதாக வீடு கட்டுபவர்கள் கண்டிப்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்ற உத்தரவு ஏற்கெனவே அமலில் உள்ளது. இதேபோல, அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
மத்திய அரசு தண்ணீரைச் சேமிக்க பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. ஏற்கெனவே வருவாய், பொதுப் பணி, அறிவியல் தொழில்நுட்பம் -  சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து புதுவையில் உள்ள 6 ஏரிகள், 30-க்கும் மேற்பட்ட குளங்களைத் தூர்வார நடவடிக்கை எடுத்துள்ளன. 
ஆற்று நீர் கடலில் கலக்காமல் இருக்க, அதன் குறுக்கே பல தடுப்பணைகளையும் கட்டியுள்ளோம்.
பழைய வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டத்தை அமல்படுத்தினால்தான் புதுவை மாநிலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும்.
புதுவையில் விவசாயத்துக்கு 75 சதவீதமும்,  வீட்டு உபயோகத்துக்கு 10 சதவீதமும், தொழில்சாலைகளுக்கு 10 சதவீதமும், இதர திட்டங்களுக்கு 5 சதவீதமும் நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்தி வருகிறோம்.
விவசாயிகள் அதிக அளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தாமல் விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, புதிதாக வீடு கட்டுபவர்கள், கட்டடங்கள் கட்டுபவர்கள் மழைநீர் கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படும்.
துபை, சவூதி அரேபியா, அபுதாபி போன்ற நாடுகளில் பெரிய அளவில் கடல் நீரைச் சுத்திகரித்து குடிநீருக்கும், தொழில்சாலைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். 
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களும் கடற்கரையோரம் அமைந்திருப்பதால்,  கடல் நீரைச் சுத்திகரித்து குடிப்பதற்கும், வீட்டு உபயோகத்துக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தினால் பெரிய அளவில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கலாம். இந்தத் திட்டத்துக்காக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
புதுவையில் பட்ஜெட் தாக்கலின் போது, நிலத்தடி நீரைச் சேமிப்பது தொடர்பான முக்கியமான அம்சங்கள் கட்டாயமாக இடம் பெறும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
நிகழ்ச்சியில் வருவாய்த் துறைச் செயலர் அசோக்குமார்,   புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண், காரைக்கால் மாவட்ட ஆட்சியர்  விக்ராந்த் ராஜா உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com