ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்தத் தியாகத்துக்கும் தயார்: முதல்வர் நாராயணசாமி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்து நிறுத்த எந்தத் தியாகமும் செய்ய தயார் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்து நிறுத்த எந்தத் தியாகமும் செய்ய தயார் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்தும் நிறுத்தும் வகையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், வருகிற 16-ஆம் தேதி புதுச்சேரியில் மிகப் பெரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்தை  விளக்கி புதுச்சேரி உப்பளம் பகுதியில் விழிப்புணர்வு பிரசாரக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடக்கிவைத்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 112 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக ஆய்வு செய்ய மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி அளித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுதொடர்பாக மத்திய அரசு, புதுவை அரசுக்கு கடிதம் அனுப்பியது.
காரைக்கால் பிராந்தியத்தில் திருநள்ளாறு, நெடுங்காடு பகுதிகளில்  ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பே  மத்திய அரசு முடிவு எடுத்த போது, திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் அறிவித்தேன். ஆய்வுக்கும் அனுமதிக்க மாட்டோம் என அறிவித்தோம்.
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியளித்த 112 இடங்கள் கடல், நிலப் பகுதிகள் ஆகும். கடல் பகுதியில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், மீனவர்களும்,  நிலப் பகுதியில் செயல்படுத்தினால் விவசாயிகளும் பாதிக்கப்படுவர். எனவே, இந்தத் திட்டத்தை புதுவையில் செயல்படுத்தக் கூடாது என பிரதமர் மோடி,  பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், இதுவரை பதில் வரவில்லை.
தமிழகத்தில் 300 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆராய்ச்சிக்கு ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.  இந்தத் திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தியுள்ளனர்.
புதுவையில் விவசாயிகள் 
மற்றும் மீனவர்களின் வருவாய்தான் அரசுக்கு ஜீவநாடி. இந்த இரண்டு சமுதாயங்களையும் பாதிக்கும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்தத் திட்டத்தை புதுவை மக்கள் மீது மத்திய அரசு வலிய திணிக்கிறது. இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
இந்தத் திட்டத்தை எதிர்க்க எந்தப் போராட்டத்தையும் சந்திக்க தயார். எங்களைப் பொருத்தவரை ஆட்சியில் இருப்பது முக்கியம் அல்ல. ராணுவமே வந்தாலும் மக்கள் நலனுக்காக இந்தத் திட்டத்தை எதிர்ப்போம். இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த எந்த தியாகத்துக்கும் நாங்கள் தயார் என்றார் முதல்வர் நாராயணசாமி.
கூட்டத்தில் அமைச்சர் ஆ.நமச்சிவாயம், புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுச் செயலர் ஆர்.ராஜாங்கம், மாநில மதிமுக அமைப்பாளர் கபிரியேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com