சுடச்சுட

  


  திருபுவனை அருகே காட்டேரிக்குப்பம் கடைவீதியில் குடிநீர் வழங்கக் கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிகுப்பம் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  
  இந்தப் பகுதியில் குடிநீர் மோட்டார் பழுதானதால், கடந்த 3 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. இதைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  தகவலறிந்த காட்டேரிகுப்பம் காவல் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
  உயரதிகாரிகள் வந்து வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறிய பொதுமக்கள் மறியலைத் தொடர்ந்தனர்.
  இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.  ஆர்.செல்வம், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  
  பழுதான மோட்டாரை பழுது பார்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தவுடன் இந்தப் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
  இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 
  இந்தப் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai