புதுவை அரசு பாலிடெக்னிக் காலியிடங்களில் தமிழக மாணவர்கள் சேரலாம்: அமைச்சர் தகவல்

புதுவை அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களில் தமிழக மாணவர்கள் சேரலாம் என்று மாநில கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.


புதுவை அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களில் தமிழக மாணவர்கள் சேரலாம் என்று மாநில கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: 
புதுவை மாநிலத்தில் மொத்தம் 6 பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 1, 512 இடங்கள் உள்ளன. இதுவரை 721 இடங்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 791 இடங்களுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கவில்லை.
புதுச்சேரியில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் 179 இடங்களும், மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 100 இடங்களும், காரைக்காலில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 297 இடங்களும், மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 142 இடங்களும், மாஹேவில் 37 இடங்களும், ஏனாமில் 36 இடங்களும் காலியாக உள்ளன.
இந்த இடங்களில் சேர விரும்பும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் நேரடியாகச் சென்று சேர்ந்து கொள்ளலாம். மேலும், 12-ஆம்  வகுப்பு படித்து முடித்தவர்களும் நேரடியாக 2-ஆம் ஆண்டில் சேரலாம்.  இவர்களுக்கு 841 இடங்கள் உள்ளன. 
தற்போது 618 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 22-ஆம் தேதி கடைசி நாளாகும். இருப்பினும், ஜூலை கடைசி வரை சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் ஆசிரியர்களுக்கான ஊதியமோ,  நிர்வாக செலவோ குறைக்கப்படுவது இல்லை. ஓராண்டுக்கு ஒரு மாணவருக்கு அரசு ரூ. 1.10 லட்சம் செலவு செய்கிறது. பொறியியல் கல்லூரி சேர்க்கை குறைந்ததை அடுத்து, பாலிடெக்னிக் கல்லூரியிலும் சேர்க்கை குறைந்துவிட்டது.
ஆனால், பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை முடிப்பவர்கள் 70 சதவீதத்துக்கும் மேலானவர்கள் வேலைவாய்ப்பை உடனடியாகப் பெற்று விடுகின்றனர்.  எனவே, பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பயில மாணவர்கள் முன்வர வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ளூர் மாணவர்கள் சேர்க்கப்பட்ட பிறகு காலியாக இருக்கும் இடங்களில் அண்டை மாநில மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.  தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ. 40 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாஹேவில் மொத்தமுள்ள 102 இடங்களில் 17 பேர் மட்டுமே மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள். 48 பேர் கேரளத்தில் இருந்து சேர்ந்துள்ளனர். அதுபோல, புதுச்சேரி, காரைக்காலில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தமிழக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். புதுச்சேரியை ஒட்டியுள்ள திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த காரைக்காலில் உள்ள நேரு வேளாண் அறிவியல் கல்லூரி, கடந்த ஆட்சியில் புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. 
இதனால், அங்கு பிஎஸ்சி (வேளாண்மை) முடித்தவர்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் காரைக்கால் வேளாண் கல்லூரியைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
மேலும், புதுவை மாணவர்களை மேற்படிப்பில் சேர்த்து கொள்ளவும் கடிதம் அனுப்பினோம். 
இதற்கு ஒப்புதல் கிடைத்ததால், இந்த வாய்ப்பை புதுச்சேரி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
புதுவை அரசுக் கலை கல்லூரிகளில் 6 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால், 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாங்கள் தேர்வு செய்த கெளரவ பேராசிரியர்களை நியமனம் செய்து கொள்ள ஆளுநர் அனுமதி தரவில்லை. 
இதனால்தான் புதிதாக இணையதளம் மூலம் நாடு முழுவதும் இருப்பவர்கள் பங்கேற்கும் வகையில் தேர்வு நடத்த உள்ளோம் என்றார் அமைச்சர் கமலக்கண்ணன்.
பேட்டியின் போது, உயர்கல்வித்,துறை இயக்குநர் யாசிம் நாராயண ரெட்டி,  வேளாண்,துறை இயக்குநர் பாலகாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com