குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு நிதி உதவி: எம்.எல்.ஏ. வழங்கினார்
By DIN | Published On : 22nd July 2019 08:10 AM | Last Updated : 22nd July 2019 08:10 AM | அ+அ அ- |

தட்டாஞ்சாவடி தொகுதியில் குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கினார்.
புதுவை அரசின் வருவாய்த் துறை சார்பில், ராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், குடும்பத்தில் வருமானத்தை ஈட்டும் தலைவர்கள் இறந்தால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில், இயற்கையான முறையில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 ஆயிரமும், விபத்து காரணமாக இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.75 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
அந்த வகையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் இயற்கையான முறையில் குடும்பத் தலைவரை இழந்த 19 குடும்பத்தினருக்கு தலா ரூ.30 ஆயிரமும், விபத்தின் காரணமாக மரணம் அடைந்ததால் குடும்பத் தலைவரை இழந்த 5 குடும்பங்களுக்கு தலா ரூ.75 ஆயிரமும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், தொகுதி எம்.எல்.ஏ.வான வெங்கடேசன் கலந்துகொண்டு நிதியுதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.