வீடுகளில் சோலார் பேனல் பொருத்தினால் 40% மானியம்: புதுவை சமூக நலத் துறை அமைச்சர்

புதுவையில் வீடுகளில் சோலார் பேனல் பொருத்தினால் 40 சதவீத மானியம் வழங்கப்படும் என சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

புதுவையில் வீடுகளில் சோலார் பேனல் பொருத்தினால் 40 சதவீத மானியம் வழங்கப்படும் என சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
புதுவை மகளிர் சுயசார்பு இயக்கத்தின் வெள்ளி விழா மாநில மாநாடு புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நடைபெற்ற கருத்தரங்குக்கு ஆலோசகர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க கெளரவத் தலைவர் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவரும், நடிகையுமான ரோஹிணி, தமிழ்நாடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் வாலண்டினா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
இதில், சமூக நலத் துறை
அமைச்சர் கந்தசாமி பேசியதாவது: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நெகிழிப் பைகள், தேநீர் குவளை போன்ற பொருள்களுக்கு புதுவை மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்கள் தரம் பிரித்து வழங்கினால், மக்கும் குப்பையை உரமாக்கி, அதை விவசாயிகளுக்கு வழங்க முடியும். இதற்கான திட்டத்தை தொடங்கி நிதி ஒதுக்கியுள்ளோம். இதன் மூலம் மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மாடித்தோட்டத்தில் காய்கறி மற்றும் பூச்செடி வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி மானியம் வழங்க திட்டமிட்டுள்ளோம். 
இத் திட்டமும் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல, வீடுகளில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க உதவும் சோலார் பேனல் பொருத்தினால், 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். புதுச்சேரியில் உள்ள நிதிநிலைமைக்கு அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது கஷ்டம். எனவே, மகளிர் சுயதொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், பொதுச்செயலர் சிவசாமி, பொருளாளர் மாரிமுத்து வேலை அறிக்கை, நிதிநிலை அறிக்கைகளை வெளியிட்டனர். இதில், திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com