பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 23rd July 2019 08:41 AM | Last Updated : 23rd July 2019 08:41 AM | அ+அ அ- |

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவரும், அமைச்சருமான ஆ. நமச்சிவாயம் தலைமை வகித்தார். இதில் முதல்வர் வே. நாராயணசாமி, கட்சியின் துணைத் தலைவர் நீல. கங்காதரன், அமைச்சர் கமலக்கண்ணன், எம்எல்ஏக்கள் விஜயவேணி, ஜெயமூர்த்தி, தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், உத்தரபிரதேச மாநிலம் சோனா பத்ராவில் மலைவாழ் மக்களின் நிலத்தை கைப்பற்ற முயன்ற வன்முறைக் கும்பல் 10 பேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை அந்த மாநில அரசு கைது செய்து, விடுவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், மலைவாழ் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து முழக்கமிடப்பட்டது.
ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கும், தில்லியின் முன்னாள் முதல்வர் ஷிலா தீட்சித் இறப்பிற்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேடையை தவிர்த்த நமச்சிவாயம்: முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வருவதற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் தொடங்கியதால், போராட்ட மேடையில் ஏறாமல் தனது ஆதரவாளர்களுடன் ஓரமாக நின்று கொண்டார் அவர்.
இதனால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கு வந்த முதல்வர் வே. நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயத்தை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.