Enable Javscript for better performance
அரசுப் பதிவுகளில் ஜாதி பெயர்களை நீக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பதிவுகளில் ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது.
    இந்த அமைப்பின் 3-ஆவது மாநில மாநாடு புதுவை மாநிலம், வில்லியனூரில் அண்மையில் நடைபெற்றது. அமைப்பின் புதுவைத் தலைவர் செயராமன் தலைமை வகித்தார். மாநாட்டை தமிழ்நாடு இணைச் செயலர் சுவாமிநாதன் தொடக்கிவைத்தார்.
    திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, அம்பேத்கர் மக்கள் நலச் சங்க கெளரவத் தலைவர் நீல.கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார். இதில், தமிழ்நாடு மற்றும் புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    மாநாட்டில், தலித் சிறப்புக் கூறு நிதியை தலித்துகளுக்கு பயன்படாத துறைகளுக்கு ஒதுக்கி மடைமாற்றம் செய்வது, தலித் சிறப்புக் கூறு சட்ட விதிகளுக்கு முரணானதாகும். தலித் மக்களின் நிதியை தலித் மக்களுக்கே பயன்படும் விதத்தில் திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும்.
    அருந்ததியர் சமுதாய மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும், கல்வி, வேலைவாய்ப்பில் கூடுதல் முன்னுரிமையும் வழங்க வேண்டும். 
    தலித் கிராமங்களின் உள்புற சாலைகளை வடிகால் வசதியோடு புதிய சாலைகளாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai