புதுவை அரசின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு நாராயணசாமி கோரிக்கை
By DIN | Published On : 01st June 2019 07:47 AM | Last Updated : 01st June 2019 07:47 AM | அ+அ அ- |

புதுவை அரசு வாங்கிய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது :
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் நரேந்திரமோடி அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
ஆகவே, அதைக் கருத்தில் கொண்டு பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநில வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கவும், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றவும் மாநில அரசுகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
புதுவை மாநிலத்துக்கு கொடுக்க வேண்டிய நிதி, 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றியதற்கான நிதி, மானியத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டிய நிதி உள்ளிட்டவறை மத்திய அரசு வழங்க வேண்டும்.
ஏற்கெனவே, மாநில அரசு வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். புதுவை அரசுக்கு 90 சதவீத மானியம், மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்றும், நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கும் மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவோம் என்றார் முதல்வர் நாராயணசாமி.
அப்போது, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மாற்றம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதுகுறித்து மத்திய அரசே முடிவு செய்யும். நாங்கள் முடிவு செய்ய முடியாது என்றார் நாராயணசாமி.
பேட்டியின்போது, கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், அரசு கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன், கல்வித் துறைச் செயலர் அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.