புதுவை ஜிப்மரில் நாளை எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு

புதுவை ஜிப்மரில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

புதுவை ஜிப்மரில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து புதுவை ஜிப்மர் நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
 புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 2019-ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு வருகிற ஜூன் 2-ஆம் தேதி காலை, மதியம் என இரு வேளைகளாக நடைபெறவுள்ளது. 150 இடங்கள் ஜிப்மர் புதுச்சேரிக்கும்,  50 இடங்கள் ஜிப்மர் காரைக்காலுக்கும் என மொத்தம் 200 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 இந்தத் தேர்வில் மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 272 மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர். காலை வேளையில் 94 ஆயிரத்து 73 பேரும், மதிய வேளையில் 90 ஆயிரத்து 199 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் காலை 10 முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 முதல் 5.30 மணி வரையும் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு மேல் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தாமதமாக வரும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடையாது.
 நாடு முழுவதும் 25 மாநிலங்களில் 132 நகரங்களில் உள்ள 280 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. புதுச்சேரியில் உள்ள 7 மையங்களில் 2,279 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாகவே தேர்வு மையங்களை பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் உரிய அடையாள அட்டை (அசல் மற்றும் நகல்) கொண்டு வர வேண்டும். தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை கொண்டு வரத் தவறிய மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். கால்குலேட்டர், கைக்கடிகாரம்,  செல்லிடப்பேசி மற்றும் மின்னணு கருவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.  ஊனமுற்றோருக்காக தரைதளத்தில் தேர்வு எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வருகிற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும். முதல் கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ளது. வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படும். கூடுதல் விவரங்களை ‌w‌w‌w.‌j‌i‌p‌m‌e‌r.‌e‌d‌u.‌i‌n என்ற ஜிப்மர் இணையதளத்தில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com