ஆளுநருக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது குறித்து முதல்வர் விளக்கம்

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது குறித்து புதுவை முதல்வர் வே.நாராயணசாமி விளக்கம் அளித்தார்.


துணைநிலை ஆளுநர் கிரண் பேடி எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது குறித்து புதுவை முதல்வர் வே.நாராயணசாமி விளக்கம் அளித்தார்.
புதுவை அரசின் தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
தமிழகத்தில் 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களைத் திறப்பது குறித்து முடிவெடுத்தது போல, புதுவை அரசு உடனடியாக முடிவெடுக்க முடியாது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டே அவ்வாறு முடிவெடுக்க முடியும். இதுதொடர்பாக வணிகர்கள்,  பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்.
நான் (முதல்வர்) ஆளுநருக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து வன்முறையைத் தூண்டவில்லை. முதல்வருக்கு போராட்டம் நடத்த உரிமையுண்டு. மக்கள் பிரச்னைக்காக எதையும் செய்யத் தயாராக உள்ளோம். 
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. வருமானத்தை உயர்த்தவும் அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்க  புதிய தொழில்சாலைகளைக் கொண்டுவர முடியவில்லை. இதற்கான பணிகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தந்தாலும், கோப்புகள் காரணமின்றி திரும்பி வருகின்றன.  
இதனால், மாநிலத்தின் வளர்ச்சி குறையும் நிலை உள்ளது.
இந்திய அளவிலான பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருந்தாலும், புதுவையின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக உள்ளது. இது குறைந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது.
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஒத்துழைப்பு அளித்திருந்தால் புதிய காவலர்கள், ஆசிரியர்களை கடந்த ஓராண்டுக்கு முன்பே நியமித்திருக்கலாம்.
விவசாயக் கடன் தள்ளுபடியைக் கூட பல போராட்டங்களுக்குப் பின்னர்தான் செய்ய முடிந்தது. ஒன்றரை ஆண்டுகள் கழித்துத்தான் புதிய காவலர்களைப் பணி நியமனம் செய்ய முடிந்தது. தனிப்பட்ட முறையில் ஆளுநர் மீது எந்தவிதமான விரோதமும் இல்லை. 
அலுவலக ஊழியர் நியமனம் போன்ற சிறு சிறு பணிகளுக்குக்கூட கோப்புகளை ஆளுநர் 
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பக் கூடாது.  அரிதினும் அரிதான கோப்புகளை மட்டுமே அவ்வாறு அனுப்பவேண்டும். அரசின் திட்டங்களைக் கொண்டுவர காலதாமதம் ஏற்படக் கூடாது. 
ஆளுநர் அரசுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.  இதற்காகத்தான் ஆளுநருக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com