புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீண்டும் ஆய்வுப் பணி

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை மீண்டும் தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார்.


புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை மீண்டும் தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார்.
புதுவை மாநில துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றது முதல் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏரி, குளங்களைப் பார்வையிடுவது, அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
ஆளுநரின் தன்னிச்சையான இந்தச் செயல்பாட்டுக்கு முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏ க.லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், துணைநிலை ஆளுநரின் அதிகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது எனத் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, மக்களவைத் தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. கடந்த சில நாள்களுக்கு முன்பு தில்லிக்குச் சென்றிருந்த ஆளுநர் கிரண் பேடி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துவிட்டு, புதுவை திரும்பினார். தற்போது, மீண்டும் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்.
மேலும், பல வாரங்களாக நிறுத்தி வைத்திருந்த ஆய்வுப் பணியையும் சனிக்கிழமை அவர் மீண்டும் தொடங்கினார்.
ஆம்பூர் சாலையில் உள்ள பெரிய வாய்க்காலைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், தொடர்ந்து கனகன் ஏரிக்குச் சென்று பார்வையிட்டு, பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் ஏரியில் நடைபாதை பராமரிப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பணியை விரைந்து முடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com