மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பாஜகவினர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மருத்துவக்


மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பாஜகவினர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், ஏழை - எளிய மக்களின் நலன் கருதி மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்ற இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற முடியும். புதுவை மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஒரு லட்சம் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மாநில அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. இதைக் கண்டித்தும், உடனடியாக புதுவையில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து பாஜக தலைவர் சாமிநாதன் கூறியதாவது: நாடு முழுவதும் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் நிலையில், புதுவையில் மட்டும் இதுவரை அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், உரிய சிகிச்சை பெற முடியாமல் பலர் இறந்துள்ளனர். இது காங்கிரஸ் அரசின் மக்கள் மீதான 
அக்கறையின்மையைக் காட்டுகிறது. மக்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. புதுவையில் ஒரு வாரத்துக்குள் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தாவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, 
பாஜகவினர் சுகாதாரத் துறை அலுவலகத்துக்குச் சென்று, சுகாதாரத் துறை இயக்குநர் ராமன், மருத்துவக் கண்காணிப்பாளர் மோகன்குமார் ஆகியோரைச் சந்தித்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com