சிறந்த சேவைக்கான தேசிய விருது பெற்ற பல்கலை. ஊழியருக்கு பாராட்டு 

சிறந்த சேவைக்கான தேசிய விருது பெற்ற புதுவை மத்திய பல்கலைக்கழக ஊழியர் ஆறுமுகத்தை பல்கலைக்கழகப் பதிவாளர் சித்ரா பாராட்டினார்

சிறந்த சேவைக்கான தேசிய விருது பெற்ற புதுவை மத்திய பல்கலைக்கழக ஊழியர் ஆறுமுகத்தை பல்கலைக்கழகப் பதிவாளர் சித்ரா பாராட்டினார்.
 புதுவை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தில் முதுநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஆறுமுகம். இவரது சமூக, கல்வி, இளைஞர் நலன் மற்றும் கலை மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டி, தில்லியில் இயங்கி வரும் இந்திய பன்னாட்டு நட்புறவுக் கழகமானது சிறந்த சேவைக்கான மகாத்மா காந்தி வாழ்நாள் சாதனையாளர் விருதை அண்மையில் வழங்கி, கெளரவித்தது.
 தில்லி பன்னாட்டு வணிக மைய வளாகத்தில் நடைபெற்ற விருது அளிப்பு விழாவில், மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் குரியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பல்கலைக்கழக முதுநிலை உதவியாளர் ஆறுமுகத்தின் சேவைகளைப் பாராட்டி, விருது அளித்து கெளரவித்தார்.மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில், கலை, விளையாட்டு, கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம், கிராமியக் கலை, மகளிர் மேம்பாடு, முதியோர் நலன், சுயதொழில் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய துறைகளில் தேசிய அளவில் சிறந்த சேவை செய்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
 இந்த நிலையில், தேசிய அளவில் விருது பெற்ற ஆறுமுகம் திங்கள்கிழமை புதுவை மத்திய பல்கலைக்கழகப் பதிவாளர் சித்ராவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
 விருது பெற்ற ஆறுமுகம், கடந்த 33 ஆண்டுகளாகப் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com