ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: மு.க.ஸ்டாலின் அஞ்சலி 

புதுவை முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமனின் உடல், அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

புதுவை முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமனின் உடல், அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
 புதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல் நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை அதிகாலை புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
 புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி, திமுக மாநில அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவகுமார், இரா.சிவா எம்எல்ஏ, மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநிலத் தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் மற்றும் தோழமைக் கட்சியினர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ஜானகிராமன் உடலுக்கு மலர் வளையம் வைத்து திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
 அவரது உடல் மீது திங்கள்கிழமை மாலை தேசியக்கொடி போர்த்தப்பட்டது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் புதுச்சேரியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் ஜானகிராமனின் உடல் அவரது சொந்த ஊரான மரக்காணம் அருகே ஆலத்தூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
 அவரது உடல் பூர்வீக இடத்தில், அவரது பெற்றோர் சமாதி அருகே புதுவை அரசு சார்பில், காவல் துறையினர் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
 முன்னதாக, ஜானகிராமனின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதல்வர் நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம், அமைச்சர்கள் ஆர்.கமலக்கண்ணன், மு.கந்தசாமி, அரசுக் கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன், தமிழக முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ மற்றும் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
 முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் மறைவையொட்டி, புதுவை அரசு சார்பில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
 அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com