சுடச்சுட

  

  புதுவை மாநிலம், திருபுவனையில் கீரை பறிக்கச் சென்ற இரு பெண்கள், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
  திருபுவனை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி விஜயா (50). அதே பகுதியைச் சேர்ந்த உப்பலன் மனைவி செங்கேணி (60). கீரை வியாபாரிகளான இருவரும் புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் கீரைகளைப் பறித்து சாலையோரம் சிறுகடை அமைத்து, விற்பனை செய்து வந்தனர்.
  இவர்களில் விஜயாவுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். செங்கேணியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
  செங்கேணியும், விஜயாவும் செவ்வாய்க்கிழமை மாலை திருபுவனையில் உள்ள ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான நிலத்தில் கீரை பறிக்கச் சென்றனர். அப்போது, அந்தப் பகுதியில் சூறைக்காற்று வீசியதால், மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இதைக் கவனிக்காத விஜயா மின் கம்பியை மிதித்துவிட்டார். மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய அவரைக் காப்பாற்ற செங்கேணி முயன்றார். இதில், இருவரும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய நிலையில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
  இந்த நிலையில், புதன்கிழமை காலை அந்த வழியாக விவசாய நிலங்களுக்கு வேலைக்குச் சென்ற சிலர், இரு பெண்கள் 
  மின்சாரம் பாய்ந்து இறந்து கிடப்பதைப் பார்த்து ஊர் மக்களுக்கும், திருபுவனை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
  திருபுவனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரியா தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, சடலங்களை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, அங்கு வந்த மின் வாரியத்தினர் மின் இணைப்புகளைத் துண்டித்து, அறுந்து கிடந்த மின் கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai