புதுவையில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவு

புதுவையில் மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவுபெறுகிறது.

புதுவையில் மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவுபெறுகிறது.
புதுச்சேரி பிராந்தியத்தில் காலாப்பட்டு, தேங்காய்த்திட்டு, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், நரம்பை, பனித்திட்டு, குருசுகுப்பம் உள்பட 18 மீனவ கிராமங்களும், காரைக்கால் பிராந்தியத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரை 11 மீனவ கிராமங்களும் உள்ளன.
இந்த மீனவ கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரம் பைபர் படகுகள், ஆயிரம் படகுகள், நூற்றுக்கும் மேற்பட்ட பாய்மர படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உள்பட மாநிலம் முழுவதும் மீன்பிடி தொழிலில் நேரடியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், மறைமுகமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் ஆண்டுதோறும் 
மீன்பிடி தடைக்காலமாக மத்திய,  மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதன்படி, கிழக்கு கடற்கரைப் பகுதிகளான தமிழ்நாடு, 
ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நாள்களில் படகுகளை சீரமைத்து வர்ணம் பூசுவது, சேதமடைந்த வலைகளை பராமரிப்பது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவதும், தடைக்காலம் முடிவடைந்ததும் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதும் வழக்கம். 
அதேபோல, நிகழாண்டும் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது நீக்குதல், வர்ணம் பூசுதல், வலைகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். அதன்படி, பெரும்பாலான மீன்பிடி விசைப்படகுகள் புதிதாக வர்ணம் பூசப்பட்டும், பழுது நீக்கப்பட்டும் 
புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.
ஜூன் 14-ஆம் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதால், தேங்காய்திட்டு, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீண்டும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதற்கு தயாராகி வருகின்றனர். 
இதுகுறித்து புதுவை காங்கிரஸ் மீனவர் பிரிவுத் தலைவர்  
காங்கேயன் கூறியதாவது: மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இருப்பதால், மீன் பிடிக்க கடலுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வியாழக்கிழமை (ஜூன் 13) இரவே விசைப்படகுகளில் கடலுக்குள் செல்ல திட்டமிட்டுள்ளோம். மீன்பிடி தடைக்காலத்தில் அரசு சார்பில் நிவாரணத் தொகையாக மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,500 வழங்கப்படுகிறது.
இது போதுமானதாக இல்லை. எனவே, இந்தத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வலை, கயிறு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும் அவை தரமானதாக இருப்பதில்லை. எனவே, அவற்றை தரமானதாக வழங்க 
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com