சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

துச்சேரி -ஆம்பூர் சாலை, 100 அடி சாலையோரம் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாக அகற்றினர்.


புதுச்சேரி, ஜூன் 13: புதுச்சேரி -ஆம்பூர் சாலை, 100 அடி சாலையோரம் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாக அகற்றினர்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டி.அருண் உத்தரவின் பேரில், கடந்த ஏப்ரல் 29 -ஆம் தேதி முதல் மே 21- ஆம் தேதி வரை பிரதான சாலைகளின் ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் வியாபாரிகள் கடைகளை அமைத்து, வியாபாரம் செய்வதாக அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதையடுத்து, சாலை வாரியாக நடைபாதை கடைகளை அகற்ற ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறை, நகராட்சி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து, உடனடியாக மீண்டும் அதே சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது. 

புதுச்சேரி இந்திரா காந்தி சிலையிலிருந்து மரப்பாலம் வரையிலான 100 அடி சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகள் அனைத்தும் கிரேன் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டன. 

உணவகங்கள், செருப்புக் கடைகள், இறைச்சிக் கடைகள், பூக்கடைகள், குளிர்பானக் கடைகள் என அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர். இதில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இதேபோல, சோனாம்பாளையம் சந்திப்பில் தொடங்கி எஸ்.வி. படேல் சாலை சந்திப்பு வரையிலான ஆம்பூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புப் பெட்டிக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்ட நிலையில், பல கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. 

இதேபோல, வழுதாவூர் சாலை, லாசுப்பேட்டை கிழக்குக் கடற்கரைச் சாலை, கடலூர் சாலை, விழுப்புரம் சாலை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற உள்ளோம். எனவே, ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளவர்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அரசு அலுவலர்கள் அகற்றுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com