சாலையோர இறைச்சிக் கடைகள் விரைவில் அப்புறப்படுத்தப்படும்: உழவர்கரை நகராட்சி
By DIN | Published On : 14th June 2019 11:10 AM | Last Updated : 14th June 2019 11:10 AM | அ+அ அ- |

புதுச்சேரி, ஜூன் 13: சாலையோர இறைச்சிக் கடைகள் விரைவில் அப்புறப்படுத்தப்படும் என உழவர்கரை நகராட்சி தெரிவித்தது.
இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் எம். கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழவர்கரை நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் ஆடு மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் பெருகி வருகின்றன. குறிப்பாக, விடுமுறை நாள்களில் இறைச்சிக் கடைகள் அதிகமாக வைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதுடன், சாலையோரங்களிலேயே ஆடுகளும், கோழிகளும் இறைச்சிக்காக சுகாதாரமற்ற முறையில் வெட்டப்படுகின்றன. இதன் கழிவுகள் சாலையோர வாய்க்கால்களில் கொட்டப்படுகின்றன.
இதைத் தடுக்கும் விதமாக அண்மையில் உழவர்கரை நகராட்சி ஆணையர், சுகாதார அதிகாரிகள் தலைமையில் வில்லியனூர் சாலை, வழுதாவூர் சாலைகளில் இறைச்சிக் கடைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, இங்கு கடைகள் வைக்கக் கூடாது, சாலையோரத்தில் ஆடு, கோழிகளை வெட்டக் கூடாது, மீண்டும் கடைகள் வைத்தால் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது.
மேலும், சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் இறைச்சியை வாங்க வேண்டாம் என்றும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.