ஜூலை முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய அரசு திட்டம்

புதுச்சேரி, ஜூன் 13: புதுவையில் ஜூலை முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய புதுவை அரசு திட்டமிட்டு ஆயத்தமாகி வருகிறது.

ஆண்டுதோறும் புதிய நிதி ஆண்டு ஏப்ரலில் தொடங்குவதற்கு முன்பு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அடுத்த நிதியாண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், புதுவையில் கடந்த பல ஆண்டு காலமாக பல்வேறு காரணங்களால் ஆளும் அரசுகளால் முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முடிவதில்லை.
 முழு நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்ய முடியாத காலங்களில் அடுத்த சில மாதங்களுக்கு ஊதியம் உள்ளிட்ட அரசின் பிற செலவினங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்து  இடைக் கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
அந்த வகையில், கடந்த மார்ச்  2-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாத செலவினங்களுக்கு ரூ. 2,703 கோடி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அந்தத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம். எனவே, முழு நிதிநிலை அறிக்கையை விரைந்து தாக்கல் செய்ய முதல்வர் நாராயணசாமி முடிவு செய்துள்ளார்.
அதற்காக அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக புதுவை சட்டப்பேரவையில் உள்ள குழு அறையில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் 
அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு உள்ளிட்ட துறை அதிகாரிகள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வகித்து வரும், சுகாதாரத் துறை, சுற்றுலாத் துறை, கலைப் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளில் புதிய திட்டங்களைச் செயல்படுத்த தேவைப்படும் நிதி குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் வகித்து வரும் துறைகள் குறித்து கருத்துகளைக் கேட்டறிய முதல்வர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார். 
இதையடுத்து, ஒரு வாரத்துக்குப் பின்னர், ஆளுநர் கிரண் பேடி தலைமையில் மாநிலத் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும். 
இதில், நிதிநிலை அறிக்கைக்கு தேவைப்படும் மொத்த நிதி குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். ஆளுநரின் அனுமதிக்குப் பிறகு, சட்டப்பேரவைக் கூட்டப்பட்டு, நிதிநிலை அறிக்கையை ஜூலை முதல் வாரத்தில் சமர்ப்பிக்க அரசு தயாராகி வருகிறது.
இந்த நிலையில், பொதுப் பணித் துறை  மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சமூக நலம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் மு.கந்தசாமி ஆகியோருடன் நிதிநிலை அறிக்கை தொடர்பாக முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com