மீனவர் பேரவை சார்பில் கோகிலாம்பிகை அம்மனுக்கு சீர்வரிசை

புதுச்சேரி, ஜூன் 13: மீனவர் பேரவை சார்பில் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் உள்ள கோகிலாம்பிகை அம்மனுக்கு வியாழக்கிழமை சீர்வரிசை வழங்கப்பட்டது.
வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் குடிகொண்டுள்ள கோகிலாம்பிகை அம்மன் புராண காலத்தில் பருவதராஜ மன்னரின் மகளாக பாவித்து, வில்லியனூர் பகுதியில் வாழ்ந்து வரும் மீனவ குல மரபினரால் ஆண்டுதோறும் தேரில் பவனி வரும் அம்மனுக்கு அணிவிக்கும் பட்டுப் புடவை மற்றும் திருக்காமீஸ்வரருக்கு அணிவிக்கப்படும் பட்டு வேட்டி, துண்டு ஆகியவை சீர்வரிசைப் பொருள்களுடன் பாரம்பரியமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டு மீனவளத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில், மீனவ குல மரபினர் கோயில் நிர்வாகத்தினரிடம் சீர்வரிசைப் பொருள்களை வழங்கினர்.
முன்னதாக, வில்லியனூர் பட்டினவர் மடம் அருகிலிருந்து மீனவ சமுதாய பெண்கள் உள்பட பலரால் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட பட்டுப் புடவை, வேட்டி துண்டு உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்கள் கோயில் வளாகத்தில் கோகிலாம்பிகை சன்னதியில் வைக்கப்பட்டு, கோயில் அதிகாரி ஜி.திருவரசனிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ, மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் எ.காங்கேயன், பருவதராஜ குல சங்கத் தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com