ஜிப்மரில் சிகிச்சை பெறுபவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இல்லை: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இல்லை என பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இல்லை என பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
கடலூர் மாவட்டம், உருளைமேடு பகுதி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 53 வயதாகும் தொழிலாளி ஒருவர், கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் கூலி வேலை செய்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பினார். அப்போது முதல் அவருக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அவர், கடலூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். எனினும், காய்ச்சல் தீவிரமடைந்ததால், தீவிர சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 10 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தொழிலாளிக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதை அறிந்து, அவரை தனி வார்டில் தனிமைப்படுத்தி, ரத்த மாதிரிகளைச் சேகரித்து, புணேவில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், புணேவுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை ஜிப்மருக்கு வந்தது. இதில், அந்த நோயாளிக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, அவருக்கு வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஜிப்மர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com