1,411 மீனவர்களுக்கு ஓய்வூதியம்
By DIN | Published On : 18th June 2019 09:29 AM | Last Updated : 18th June 2019 09:29 AM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் புதிதாக 1,411 பேருக்கு மீனவ முதியோர் ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது.
புதுவை அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை மூலம் மீனவ முதியோர் ஓய்வூதியம் பெறும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த (புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம்) 1,411 புதிய பயனாளிகள் கண்டறியப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மீனவ ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த மார்ச் மாதத்துக்கான ஓய்வூதியமாக, 50 -59 வயது வரை ரூ. 1,570, 60 -79 வயது வரை ரூ. 2,090, 80 - 80 வயதுக்கும் மேல் ரூ. 3,135 ம் என வயதுக்கேற்ப கிடைக்கும். இந்த பணம், மீனவ ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்
இதன்படி, புதுச்சேரியைச் சேர்ந்த 758 பயனாளிகளுக்கு ரூ. 12,07,225 ஐ ஓய்வூதியமாக வழங்கும் குறிப்பாணையை மீன்வளத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திங்கள்கிழமை பயனாளிகளுக்கு வழங்கினர். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மீனவளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு. கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், த. ஜெயமூர்த்தி, மீன்வளத்துறை இயக்குநர் இரா. முனிசாமி, இணை இயக்குநர் கு. தெய்வசிகாமணி உள்ளிட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.