பிப்டிக் நிறுவனத்தில் கடனுதவி பெற புதிய மென்பொருள் அறிமுகம்
By DIN | Published On : 18th June 2019 09:44 AM | Last Updated : 18th June 2019 09:44 AM | அ+அ அ- |

புதுச்சேரி தொழில் ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் முதலீட்டு நிறுவனம் (பிப்டிக்) நிறுவனத்தில் கடனுதவி பெற தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் புதிய மென்பொருள் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஈஆர்பி எனும் இந்த மென்பொருளை பிப்டிக் தலைவர் இரா. சிவா எம்எல்ஏ அறிமுகப்படுத்தி வைத்தார். இதில் பிப்டிக் நிறுவன மேலாண் இயக்குநர் ஜி. சத்தியமூர்த்தி, பொதுமேலாளர்கள் வி. ஆதிமூலம், என். சுரேஷ் நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மென்பொருள் மூலம் தொழில் முனைவோர்கள் நிதியுதவி, தொழிலுக்கான இடம் போன்றவற்றுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், தங்களுடைய விண்ணப்பத்தின் நிலையையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இதனால், தொழில் முனைவோருக்கு விரைந்து, ஒளிவுமறைவற்ற சேவையை வழங்க முடியும்.
புதுவை பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையால் வடிவமைக்கப்பட்ட இந்த மென்பொருள் விரைவில் தொழில்முனைவோரின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
முன்னதாக, இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து பிப்டிக் அலுவலக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பிப்டிக் அலுவலர்கள் தெரிவித்தனர்.