புதுவை கலைமாமணி விருதுகளை உடனே வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 18th June 2019 09:29 AM | Last Updated : 18th June 2019 09:29 AM | அ+அ அ- |

புதுவை கலைமாமணி விருதுகளை அரசு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிந்தனையாளர்கள் பேரவை வலியுறுத்தியது.
இந்தப் பேரவையின் 92 ஆவது சிந்தனையரங்கம், புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. புதுவை கோ. செல்வம் தலைமை வகித்தார். செயலர் எஸ். குமரகிருஷ்ணன் வரவேற்றார்.
கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள புதுவை கலைமாமணி விருதுகளை அரசு உடனே வழங்க வேண்டும், புதுச்சேரி அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தை விரைந்து திறக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழியாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும், புதுச்சேரி அரசு செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும், ஓய்வூதியம் பெறும் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு வீட்டு வாடகைப்படியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
புதுவை அரசு விரைவில் சட்டப்பேரவையைக் கூட்டி முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதில் மின்கட்டணக் குறைப்பு, குப்பை வரி நீக்கம் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன், திராவிடப் பேரவைத் தலைவர் நந்திவர்மன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மனித வளப் பயிற்சியாளர் டி. ராஜா, "மனிதவள ஆற்றல் மேலாண்மை' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் திரளான உறுப்பினர்கள் பங்கேற்றனர்.