புதுவையில் சுருக்குவலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படாது: மீனவர்களிடம் அமைச்சர் உறுதி
By DIN | Published On : 18th June 2019 09:47 AM | Last Updated : 18th June 2019 09:47 AM | அ+அ அ- |

புதுவையில் சுருக்குவலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படாது என்று மீனவர்களிடம், மீன்வளத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
கடலில் சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன் குஞ்சுகளும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், சுருக்குவலை பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது. இது தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் இன்னும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. உறுதியாகத் தடை செய்யப்படவில்லை. இதன் காரணமாக, புதுவை மீனவர்கள் சுருக்குவலையைத் தொடர்ந்து பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனிடையே, புதுவை மீனவர்கள் தமிழகப் பகுதிக்குச் சென்று பயன்படுத்திய சுருக்குவலைகளை அங்குள்ள அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதமும் விதித்தனர். இதற்கு புதுவை மீனவர்கள் தெரிவித்த எதிர்ப்பை தமிழக அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, புதுவை மீனவர்கள் திங்கள்கிழமை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
அப்போது, அமைச்சர் கூறியதாவது: சுருக்குவலை பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் அதை பறிமுதல் செய்துள்ளனர். மீனவர்கள் கூறியதையடுத்து, தமிழக அரசைத் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்கள் ஆணையை காண்பிக்க மறுத்துவிட்டனர். புதுவையில் வேண்டுமானால் சுருக்குவலை பயன்பாட்டுக்கு தடை கொண்டுவராமல் இருக்க முடியும். அதுவும் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வராதவரைதான்.
அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்திவிட்டால், இறுதியாக புதுவையிலும் அமல்படுத்த வேண்டிதான் இருக்கும். இருந்தாலும், ஜூன் 25-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் கூட்டத்தில் சுருக்கு வலைக்கு தடை விதிக்கக் கூடாது என்ற மீனவர்களின் கோரிக்கை மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.