கல்வித் துறை அதிகாரி வீட்டில் திருடப்பட்ட நகை, பணம் மீட்பு: இளைஞர் கைது
By DIN | Published On : 23rd June 2019 01:41 AM | Last Updated : 23rd June 2019 01:41 AM | அ+அ அ- |

கல்வித் துறை அதிகாரி வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகள், பணம் ஆகியவற்றை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர். இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் பிரேமா (55). இவர், கல்வித் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது 2-ஆவது மகளுக்கு கடந்த 17-ஆம் தேதி அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனால், பிரேமா குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு அங்கு சென்றனர். அந்த நேரத்தில், அவரது வீட்டில் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர், அங்கிருந்த பீரோ உடைத்து அதிலிருந்த தங்க நகைகள், ரூ. 4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் பாபுஜி, காவல் உதவி ஆய்வாளர்கள் புருஷோத்தமன், ராஜன் உள்ளிட்ட போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிவு செய்து, மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், அரியாங்குப்பம் சுப்பையா நகர் ஆனந்தா தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (22) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில், பிரேமா வீட்டில் திருடியது மட்டுமன்றி, அதே நாளில் வெங்கடேசன் என்பவர் வீட்டில் 7 பவுன் தங்க நகைகளைத் திருடியதும், இதுபோல பல்வேறு இடங்களில் திருடியிருப்பதும், அந்தப் பணத்தில் கார் வாங்கியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, கார், ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.3.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அவரிடமிருந்து பறிமுதல் செய்த போலீஸார், அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.