குடும்பத் தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது
By DIN | Published On : 23rd June 2019 12:51 AM | Last Updated : 23rd June 2019 12:51 AM | அ+அ அ- |

வில்லியனூரில் குடும்பத் தகராறு காரணமாக, அண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாக தம்பியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அருகே உள்ள கோபாலன் கடை பகுதியைச் சேர்ந்தவர் பாபு (55). இவரது மனைவி சுமதி (50). இவர்களுக்கு 3 மகன்கள். மூத்த மகன் அருண்பாண்டியன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இரட்டையர்களான அருள்ராஜ் (21), ஆனந்தராஜ் (21) ஆகியோர் பெற்றோருடன் வசித்து வந்தனர்.
அருள்ராஜ் பெயிண்டர் வேலையும், ஆனந்தராஜ் கட்டட வேலையும் செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில், குடும்ப பிரச்னை தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவரும் வீட்டில் அமர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் ஆனந்தராஜ், தனது அண்ணன் அருள்ராஜ் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுக் கொலை செய்தாராம்.
இதையடுத்து, அவரது பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டதால், ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி தெற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன், காவல் ஆய்வாளர் பழனிவேல், காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அருள்ராஜின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வில்லியனூர் போலீஸார் தலைமறைவான ஆனந்தராஜை தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஆனந்தராஜ் அருகே உள்ள கோயில் வளாகத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்தனர்.