ஓட்டுநர் மீது தாக்குதல்: ரெளடி உள்பட 3 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 24th June 2019 09:54 AM | Last Updated : 24th June 2019 09:54 AM | அ+அ அ- |

ஓட்டுநரைத் தாக்கியதாக ரெளடி உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை, அனிதா நகர் காவேரி வீதி 2- ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் வினோத் (28). மினி வேன் ஓட்டுநர். இவர், அனிதா நகர் கடைசி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்குவது வழக்கமாம்.
இதேபோல, கடந்த 2 நாள்களுக்கு முன்பு வினோத் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த ரெளடி துரையின் குழந்தைகளை வினோத் அடித்ததாகக் கருதி, அவரிடம் ரெளடியின் மனைவி பூரணி வாக்குவாதம் செய்தாராம்.
இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸார் வினோத்தை அழைத்து வந்து விசாரித்து அனுப்பிவிட்டனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு வீடு திரும்பிய ரெளடி துரை, அவரது மனைவி பூரணி, மற்றொரு ரெளடி குள்ளமணி ஆகியோர் சேர்ந்து, வினோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த வினோத்தை சரமாரியாக கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வினோத் அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, ரெளடி துரை, அவரது மனைவி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.