புதிய கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு வசதி: ம.நீ.ம. கோரிக்கை
By DIN | Published On : 24th June 2019 09:52 AM | Last Updated : 24th June 2019 09:52 AM | அ+அ அ- |

புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் மருத்துவர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வீடுகளில் உருவாகும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் கடலில் கலக்கின்றன. முக்கியமாக தொழில்சாலைகளில் உருவாகும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முதல் கட்டமாக அனைத்து அரசுக் கட்டடங்களிலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு மழைநீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். மழைநீர் சேமிப்பு கட்டமைப்பைஏற்படுத்துவதாக உறுதியளித்தால்தான் நகரத் திட்டக் குழுமத்தில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி தரப்படுகிறது.
ஆனால் அதன்படி, கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறதா? என்பதை நகரத் திட்டக் குழுமம் உறுதி செய்யப்படவில்லை. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல, நகரத் திட்டக் குழுமத்தில் அனுமதி பெற்றபடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து சான்றிதழ் அளித்த பின்னரே அந்தக் கட்டடத்துக்கு நிரந்தர மின் இணைப்பு வசதி தரப்படும் என்று விதிமுறையை வகுக்க வேண்டும். எனவே, இந்த விதிமுறையை வருகிற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலேயே அறிவித்து, கொண்டுவர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.