மீன்வளத் துறைக்கு அமைச்சகம்: பிரதமருக்கு மீனவர் பேரவை பாராட்டு
By DIN | Published On : 25th June 2019 09:01 AM | Last Updated : 25th June 2019 09:01 AM | அ+அ அ- |

மத்தியில் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய மீனவர் பேரவை பாராட்டு தெரிவித்தது.
இதுகுறித்து பேரவையின் தேசியத் தலைவர் ம.இளங்கோ செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மத்திய வேளாண் அமைச்சகத்தில் இருந்து மீன்வளத் துறையை தனியாகப் பிரித்து அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தோம். இதனிடையே கடந்த ஏப். 14-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடக மாநிலம், மங்களூருக்கு வந்திருந்த பிரதமர் மோடி, மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இந்த நிலையில், மீண்டும் பிரதமரான மோடி, வேளாண் துறையில் இருந்து மீன்வளத் துறையை பிரித்து தனி அமைச்சகம் உருவாக்கி ஆணை வெளியிட்டுள்ளார். அதற்கு மத்திய அமைச்சராக கிரிராஜ் சிங், இணை அமைச்சர்களாக சஞ்சீவ் பால்யன், பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணைபடி மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் உருவாக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்திய - இலங்கை மீனவர்களுக்கான பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீண்டும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின் போது மீனவர் பேரவையின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.