சுடச்சுட

  

  தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம்

  By DIN  |   Published on : 26th June 2019 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் புதுச்சேரி கல்வித் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளில் நிர்ணயக் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட, அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வே கல்லூரி, வ.உ.சி பள்ளி ஆகியவற்றை புனரமைத்து செயல்படுத்த வேண்டும்.
   மாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும். மதிய உணவுத் திட்டத்தை தனியார் தொண்டு நிறுவனத்திடம் தாரைவார்க்கக் கூடாது. மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து வசதியை பிஆர்டிசி மூலம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   விளையாட்டு மைதானம் இல்லாத நகர்ப்புற பள்ளி மாணவர்கள் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தை பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியறுத்தி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எப்) மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் (ஏஐஒய்எப்) கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   போராட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் ராமராஜா தலைமை வகித்தார். ஏஐஒய்எப் மாநில துணைச் செயலர் ரூவியர், மாநில துணைத் தலைவர் பெருமாள், ஏஐஎஸ்எப் மாநில துணைத் தலைவர் முரளி, ஏஐஎஸ்எப் புதுச்சேரி பல்கலைக்கழகப் பொறுப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   ஏஐஒய்எப் மாநிலச் செயலர் அந்தோணி, ஏஐஎஸ்எப் மாநிலச் செயலர் எழிலன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். இதில், ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai