சுடச்சுட

  

  நீர்நிலைகளை பாதுகாக்க விரைவில் உயர்நிலைக் குழு: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

  By DIN  |   Published on : 26th June 2019 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் நீர்நிலைகளைப் பாதுகாக்க பொதுமக்கள், அதிகாரிகள் இணைந்த உயர்நிலைக் குழு விரைவில் அமைக்கப்படும் என்று, பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அறிவித்தார்.
   புதுவையில் நீர்நிலைகளைப் பாதுகாத்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஆர்.கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் செயலர்கள், துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
   கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   புதுவை மக்கள் அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமன்றி, எந்தப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளதோ, அந்தப் பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழைக் காலத்தில் பெய்யும் மழைநீரை சேமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஏரி, குளங்களையும், நீர்வரத்து வாய்க்கால்களையும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
   இந்தப் பணிகளை மத்திய அரசு, மாநில அரசு அல்லது தனியார் பங்களிப்பு நிதி என எந்த நிதியில் முடிக்க முடியுமோ, அதில் முடிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்காக ஆட்சியர் தலைமையில், பொதுமக்களும் இடம் பெறும் வகையிலான உயர் நிலைக்குழு விரைவில் அமைக்கப்படும். இந்தக் குழு பணிகளை கண்காணித்து, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
   வறட்சியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கரும்பு, நெல் பயிர்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
   ஏரி, குளங்களை தூர்வார சுற்றுச்சூழல் துறை மூலம் ரூ.16.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 ஏரிகள், 32 குளங்கள் தூர்வாரப்பட வேண்டும். இவற்றில், 16 ஏரிகள், 4 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்குள் மீதமுள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். புதுச்சேரி அருகே கோணேரிக்குப்பத்தில் விரைவில் ஒரு படுகை அணை கட்டப்படும்.
   வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய 7 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 55 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்து வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அது புதுச்சேரிக்கும் கொண்டுவரப்படும். அதன் மூலம் மணல் தட்டுப்பாடு நீங்கும். தமிழகத்தைப்போல இறக்குமதி மணலுக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை. 12 சதவீதம் ராயல்டி கட்டணம் மட்டும் பெறப்பட்டுள்ளது. இறக்குமதி செய்பவர்களே விலையை நிர்ணயித்துக் கொள்வர்.
   மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் என ஏற்கெனவே கட்டட அனுமதி விதிமுறையில் உள்ளது. கட்டடத்தைக் கட்டி முடித்த பின்னர், உரிமையாளர்கள் அதை காண்பித்து அனுமதி பெற வேண்டும். ஆனால், அதை செய்யாமல் உள்ளனர் என்றார் அமைச்சர் நமச்சிவாயம்.
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai