6 மாதங்களுக்கு குடிநீர்க் கட்டணம் வசூக்கக் கூடாது: விக்கிரமராஜா வலியுறுத்தல்

தமிழகத்தில் வரும் 6 மாதங்களுக்கு குடிநீர்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

தமிழகத்தில் வரும் 6 மாதங்களுக்கு குடிநீர்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
 இந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 சென்னையில் தண்ணீர் பஞ்சத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. வியாபாரிகள் குடிநீர் வரியை இரட்டிப்பாக செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
 வணிக வரி என்ற முறையில் வீட்டுக்கு ஒரு வரியும், கடைக்கு கூடுதலான வரியும் கட்ட வேண்டியுள்ளது. ஆகவே, மாநில அரசு 6 மாதங்களுக்கு குடிநீர்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
 தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நெகிழி (பிளாஸ்டிக்) தடை சட்டத்தால் வியாபாரிகள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். புதுவை அரசும் நெகிழிக்கு தடையை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களை அரசு நிர்ணயித்து, உற்பத்தி செய்த பிறகே, இந்தத் தடையை அமல்படுத்த வேண்டும்.
 தமிழகத்தில் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்துள்ளதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட நிலையில், உரிய அனுமதி பெற்று பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் எந்தக் காரணமும் இன்றி அள்ளிச் செல்வதும், அபராதம் விதிப்பதும் தொடர்கிறது.
 இதைத் தடுக்கும் விதமாக, வரும் ஜூலை 9-ஆம் தேதி முதல் கட்டமாக பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.
 தொடர்ந்து இதேநிலை நீடித்தால், மாவட்டம் வாரியாக நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்கள் நடத்தப்படும்.
 24 மணி நேரமும் கடை திறப்பு என்பது வரவேற்புக்குரியது. ஆனால், சில மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கும் கடைகளை மட்டுமே திறக்க வேண்டும், பிற கடைகளைத் திறக்கக் கூடாது என்ற கெடுபிடிகள் உள்ளன. சட்ட விதியில் இதுபோன்று இல்லை. எனவே, எந்த மாவட்டத்திலும் கடைகளைத் திறக்கக் கூடாது என்று காவல் துறையினர் வலியுறுத்தக் கூடாது. அரசும், காவல் துறையும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
 புதுவையில் இரவு நேரங்களில் கடைகளைத் திறப்பது குறித்து வியாபாரிகளை அழைத்துப் பேசி, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதுவையில் வணிகர் நல வாரியத்தை அமைக்க வேண்டும் என்றார் விக்கிரமராஜா.
 முன்னதாக, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் கோவிந்தராஜூலு வரவேற்றார். புதுவை வணிகர் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கர், செயலர் பாலு, கடலூர் மண்டலத் தலைவர் சண்முகம், விழுப்புரம் மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன், விழுப்புரம் தொழில் வர்த்தக சபைத் தலைவர் ரமேஷ், திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் மண்ணுலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com