ஊரக வளர்ச்சித் துறை சமூக வல்லுநர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுவை ஊரக வளர்ச்சித் துறை சமூக வல்லுநர்களுக்கு ரூ.ஆயிரம் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.

புதுவை ஊரக வளர்ச்சித் துறை சமூக வல்லுநர்களுக்கு ரூ.ஆயிரம் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.
 புதுவை ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுச்சேரியை வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின்போது புதுவையில் 30 ஆயிரம் சுய
 உதவிக் குழுக்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்கப்பட்டது. பெண்கள் சுயமாக தொழில் செய்யவும், கணவரை நம்பி இருக்கும் நிலையை தவிர்ப்பதற்காகவும் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
 குடும்பத்தின் சுமைதாங்கி பெண்கள்தான். பெண்கள் தலை நிமிர்ந்து நிற்க சுய உதவிக் குழு பெரிய அளவில் உதவி புரிகிறது. பிள்ளைகளை பராமரிப்பதுடன், படிக்க கட்டணமும் செலுத்துகின்றனர்.
 பெண்கள் உள்ளாட்சித் தேர்தலில் நிற்க வேண்டும் என்று 33 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். இதை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 50 சதவீதமாக உயர்த்தி உள்ளோம். மக்களவை, சட்டப்பேரவையில் 33 சதவீதம் தர சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் போராடி வருகின்றனர். அதை தடுப்பது பாஜக தான்.
 புதுவையில் சுய உதவிக் குழுக்களுக்கு பஞ்சம் இல்லை. சுய உதவிக் குழு பெண்கள் பணத்தை வட்டிக்கு விடாமல் தொழில் செய்ய வேண்டும். பெண்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க பல திட்டங்களை கொண்டு வரப்பட்டுள்ளன.
 ஆண்கள் தொழில் தொடங்கினால் 50 சதவீதம் மானியம், பெண்களுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.
 பெண்களுக்கு கடன் கொடுத்தால் முறையாக திருப்பி செலுத்தப்பட்டு விடுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 99 சதவீதம் கடனை திருப்பிச் செலுத்துகின்றனர்.
 இதனால் புதுவைக்கு பிரதமரின் விருது கிடைக்க உள்ளது. காலத்தோடு கடனை திருப்பி செலுத்தினால் 5 சதவீதம் மாநில அரசின் வட்டி தள்ளுபடி கிடைக்கும். ஊரக வளர்ச்சித் துறைக்கு தேவையான பொருள்களை வாங்கி விற்கும் பணியை சுய உதவிக் குழுக்களிடம் தர வேண்டும். பெண்களுக்கு நிதி அதிகாரத்தை உயர்த்தி வரும் திட்டம் புதுவையை போல நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லை.
 ஊரக வளர்ச்சித் துறையில் சுய உதவிக் குழுக்களுக்காக, சுய உதவிக் குழுவில் இருந்தே பணியாற்றும் 196 சமூக வல்லுநர்களுக்கு தற்போது ரூ.2 ஆயிரம் மாத ஊதியம் தரப்படுகிறது. இது வரும் ஏப்ரலில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஊரக வளர்ச்சித் துறையில் பணி நிரந்தரம், பதவி உயர்வு கண்டிப்பாக செய்வோம் என்றார் நாராயணசாமி.
 நிகழ்ச்சிக்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி, வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், எம்எல்ஏக்கள் ஆர்.கே.ஆர்.அனந்தராமன், தனவேலு, தீப்பாய்ந்தான், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ரவி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com