சுடச்சுட

  

  பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 82 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய பலரை மறைத்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ள தமிழக காவல்துறையைக் கண்டித்தும், இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்ட உயர்நிலை விசாரணைக்குழு அமைக்க வலியுறுத்தியும் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர். 
  அதன்படி, வெள்ளிக்கிழமை காலை புதுவை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதில் திராவிடர் விடுதலைக் 
  கழகச் செயலாளர் விஜயசங்கர், மக்கள் உரிமை கூட்டமைப்பின் தலைவர் சுகுமாறன், மக்கள் வாழ்வுரிமை 
  கழகத் தலைவர் ஜெகன்நாதன், மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர்ச்செல்வன், மாணவர் கூட்டமைப்பின் சதீஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி ஸ்ரீதர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.
  தொடர்ந்து, பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து முழக்கமிட்டபடி அவர்கள், அண்ணாசாலை - நேரு வீதி - காமராஜர் சிலை சந்திப்பில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
  இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெரியக்கடை போலீஸார், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 82 பேரை கைது செய்தனர். மறியல் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai