ஆவணங்கள் இல்லாமல் அதிக பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல்: மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

ஆவணங்களின்றி அதிக அளவில் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி டி. அருண் எச்சரிக்கை விடுத்தார்.

ஆவணங்களின்றி அதிக அளவில் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி டி. அருண் எச்சரிக்கை விடுத்தார்.
தேர்தலை முன்னிட்டு, வியாபாரிகள், பொதுமக்கள், இடர்பாடின்றி ரொக்கம் எடுத்துச் செல்வதற்கான நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்
கிழமை நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான டி. அருண் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரி சக்திவேல், பயிற்சி ஆட்சியர் அபிஷேக், வணிகவரித்துறை அதிகாரி ஆர். கணேசன், சிறப்பு அதிகாரி அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பினர், வியாபாரிகள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி டி. அருண் கூறியதாவது: வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ரூ. 50ஆயிரம் வரை ஆவணங்கள் இன்றி ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.  வாகனச் சோதனையின் போது, ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமானத் தொகை சிக்கினால் வருமான வரித் துறையினரிடம் தெரிவிக்கப்படும். 
வாகனச் சோதனையின் போது, ஒரு நிறைவேற்று நீதிபதியின் தலைமையில் குழு செயல்படும். குழுவின் சோதனைகள் விடியோ பதிவு செய்யப்படும். பரிசோதனையின் போது, பணமோ, பொருளோ கைப்பற்றப்பட்டால் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அப்பகுதி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.
வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தோர், தொழிலதிபர்கள் அதிகளவில் ரொக்கப்பணத்தை எடுத்துச் சென்றால், பணம் எங்கிருந்து கிடைத்தது? எதற்காகச் செலவிடப்படுகிறது? என அனைத்து ஆதாரங்களையும் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தத் தொகை பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட தொகை, அதற்காக அமைக்கப்பட்ட மாவட்ட குறைதீர் குழுவுக்கு அனுப்பி, முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, திருப்பி அளிக்கப்படும்.
பொதுமக்கள், உண்மையான நபர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவானது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, புகார் அளிக்காதபட்சத்திலும் அல்லது அரசியல் கட்சி, வேட்பாளர்கள், தேர்தலுக்கு தொடர்பில்லாதபட்சத்திலும் விடுவிக்க உரிய ஆணை பிறப்பிக்கும். 
இது தவிர தேர்தல் கால நடத்தை விதிகளுக்கு சந்தேகத்துக்கிடமான வகையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com