தட்டாஞ்சாவடி திமுகவுக்கு ஒதுக்கீடு: இந்திய கம்யூ. அதிருப்தி?

புதுவையில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால்,

புதுவையில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்,  அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. திமுக-காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டன. இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி,  மதிமுக, தேமுதிக இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டன. 
 எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமியின் கோட்டையாகக் கருதப்படும் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய அசோக் ஆனந்த் 12,754 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக-காங்கிரஸ் கூட்டணியை பின்னுக்குத் தள்ளிய மக்கள் நலக் கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சேதுசெல்வம் 5,296 வாக்குகள் பெற்று 2-ஆவது இடத்தைப் பிடித்தார்.  மூன்றாவது இடம் பிடித்த அதிமுக வேட்பாளர் காசிநாதன் (1,649 வாக்குகள்),  4-ஆவது இடம் பிடித்த திமுக வேட்பாளர் கலியபெருமாள் (1,467 வாக்குகள்) ஆகியோர் முன்வைப்புத் தொகையை இழந்தனர்.
 இந்த நிலையில்,  சொத்துக் குவிப்பு வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையை அசோக் ஆனந்த் பெற்றதால், காலியாக இருந்த தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் வந்துள்ளது.  கடந்த ஓராண்டாக மக்கள் நலக் கூட்டணி கலைந்து அதில் இருந்த இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக ஆகியவை திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளன.
 இதையடுத்து, இப்போது நடைபெறும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவது யார் என்பதில் திமுக-காங்கிரஸ்-இடதுசாரிகள் உள்ளிட்டவற்றை கொண்ட மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் குழப்பம் உருவாகியுள்ளது.  ஏற்கெனவே,  கடந்த பேரவைத் தேர்தலில் 2-ஆவது இடம் பிடித்த தங்களுக்குத்தான் இத்தொகுதியை ஒதுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 
 இந்த நிலையில், இந்தத் தொகுதியில் திமுக போட்டியிடும் என சென்னையில் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வியாழக்கிழமை இரவு அறிவித்தார். 
கடந்த பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 2-ஆவது இடம் பிடித்த தங்களைக் கலந்து ஆலோசிக்காமல்,  முன்வைப்புத் தொகையை இழந்த திமுக-காங்கிரஸ் கட்சிகள் தன்னிச்சையாக தொகுதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டது தங்களது சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது.  எனவே,  மீண்டும் சமரசம் பேசி மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட வேண்டும். அதில் சமாதானம் ஏற்படாவிடில்,  தனித்துப் போட்டியிட்டு திமுக-காங்கிரஸுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் விடாப்பிடியாக இருந்து வருகின்றனர்.  இந்த நிலையில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக-காங்கிரஸ் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அந்தக் கட்சி புறக்கணித்தது. மேலும், அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இன்று முடிவு தெரியும்?: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலர் அ.மு.சலீம் கூறியதாவது:  தட்டாஞ்சாவடி தொகுதி ஒதுக்கீடு குறித்து முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. 
இதுகுறித்து கலந்து பேசி உரிய முடிவு செய்வோம்.  மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸை ஆதரிப்போம். 
தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட வேண்டும் என்பது எங்களது மாநிலக் குழுவின் நிலைப்பாடு. வெள்ளிக்கிழமை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்ததால், திமுக-காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.  தட்டாஞ்சாவடி தொகுதி குறித்து சனிக்கிழமை மாநில நிர்வாகிகளுடன் விரிவாக விவாதம் நடத்துவோம். இதில் எடுக்கப்படும் முடிவை தேசியத் தலைமைக்கு அனுப்பி வைப்போம். கட்சித் தலைமை ஆலோசனைப்படி  இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com