ராகுல் பிரதமரானால் புதுவை அரசின் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்: முதல்வர் நாராயணசாமி வாக்குறுதி

மத்தியில்   ராகுல் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றதும், புதுவை அரசின் கடன்கள் முழுமையாக ரத்து

மத்தியில்   ராகுல் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றதும், புதுவை அரசின் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி வாக்குறுதி அளித்தார்.
 புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி: 
   புதுவையில் கடந்த தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, பொலிவுறு திட்டம், இலவச அரிசித் திட்டத்தை முழுமையாக வழங்குவோம், கூடுதல் எண்ணிக்கையில் முதியோர்,  கணவரை இழந்த பெண்களுக்கான உதவித்தொகையை வழங்குவோம், விவசாயிகள் கடனை ரத்து  செய்வோம்,  சென்டாக் பணத்தை மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்குவோம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் தொல்லை இருந்தாலும்,  மோடி அரசு தொல்லை கொடுத்தாலும்,  அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி இருந்தாலும், மாநில அரசின் வருவாயை ஆண்டுக்கு ரூ.350 கோடி உயர்த்தி, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம்.
 நாடு முழுவதும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், புதுவையில் அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியுள்ளோம். அதற்காக ஆகும் கூடுதல் செலவுத்தொகை ரூ.1,200 கோடியை மத்திய அரசு புதுவைக்கு வழங்கவில்லை. மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்தாலும்,  மத்திய அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து ஜிப்மரின் புதிய கிளையை ரூ.1,200 கோடியில் அமைக்கவும்,  சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.150 கோடியையும் பெற்றுள்ளோம். 
 என்.ரங்கசாமி முதல்வராக இருந்தபோது,  ஐந்து ஆண்டுகளில் 7 மாதங்கள் மட்டுமே உதவித்தொகை கிடைத்தது.  
5 ஆண்டுகளில் 18 மாதங்கள் மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டது. 
ஆனால், தற்போது ஆளுநர் கிரண் பேடியின் தொல்லைக்கு இடையே இலவச அரிசியை வழங்கி வருகிறோம். 
என்.ரங்கசாமி தனது ஆட்சியில் அரசு நிறுவனங்களில் தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் ஆள்களை நியமித்து ஊதியம் கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார். 
புதுவை அரசின் நிர்வாகத்தை மோசமான நிலைக்கு தள்ளியதே அவர்தான்.
  மாநில அந்தஸ்துக்காக தில்லி வரை சென்று மதச்சார்பற்ற 
திமுக-காங்கிரஸ்-இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகள்தான் போராட்டம் நடத்தின. ஆனால்,  மாநில அந்தஸ்து கோரிக்கையை மையமாக வைத்து கட்சியை தொடங்கிய என்.ரங்கசாமி,  அவரது  ஆட்சிக் காலத்தில் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2014 முதல் 2017-ஆம் ஆண்டு வரை மத்தியில் மோடி அரசை ஆதரித்த என்.ரங்கசாமி, அதற்காக குரலும் கொடுக்கவில்லை. இன்னும் 10 தேர்தல்கள் வந்தாலும்,  மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை என்.ரங்கசாமி எழுப்பி காலம் கடத்திக் கொண்டே இருப்பார்.  
மத்திய அரசு வஞ்சித்தாலும்,  ஆளுநர் கிரண் பேடி தொல்லை கொடுத்தாலும்,  கல்வி,  மருத்துவம்,  சுற்றுலா,  சட்டம்-ஒழுங்கு,  மக்கள் வசதியாக வாழும் மாநிலங்கள் பட்டியல், இயற்கை விவசாயம் ஆகியற்றில் முதலிடம் பிடித்து புதுவை காங்கிரஸ் அரசு  சாதனை அரசாகத் திகழ்கிறது. இத்தனை நெருக்கடியில் பணியாற்றியதே அரசின் மிகப்பெரிய  சாதனைதான். 
வருகிற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். 
மத்தியில் ராகுல் பிரதமரானதும் புதுவை அரசின் முழுக் கடன்கள் முழுவதையும் ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் வே.நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com