சுடச்சுட

  

  புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு: மேலிடப் பொறுப்பாளர் தகவல்

  By DIN  |   Published on : 17th March 2019 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக கட்சியின் புதுவைக்கான மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.
  புதுவையில் மக்களவைத் தேர்தல், தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள்  கூட்டம் புதுவை பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  
  கூட்டத்துக்கு புதுவை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் முன்னிலை வகித்தார். புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது தேர்தலுக்கான பிரசாரம், மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள்,  நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
  ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் தனித்தனியாக  சஞ்சய் தத் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தனவேலு எம்எல்ஏ பங்கேற்கவில்லை.  முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கத்தை சந்தித்து அவர் கருத்துகளைக் கேட்டறிந்தார். அனைவரிடமும் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? வெற்றிக்காக செய்யப்பட வேண்டிய வியூகங்கள் குறித்து கேட்டறிந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
  இதையடுத்து சஞ்சய் தத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டது.  காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அனைவருக்கும் தெரிந்தவராக, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருப்பார்.   வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விரைவில் அறிவிப்பார் என்றார் சஞ்சய் தத்.

  வைத்திலிங்கத்துடன் சஞ்சய் தத் சந்திப்பு புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கத்தை, அகில இந்திய காங்கிரஸ் கட்சிச் செயலரும், புதுவை மேலிடப் பொறுப்பாளருமான சஞ்சய் தத் சனிக்கிழமை  சந்தித்துப் பேசினார். இதனால், புதுவை மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் களமிறக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
  புதுச்சேரி வந்துள்ள காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 
  இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கந்தப்ப முதலியார் தெருவில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்தின் வீட்டுக்கு சனிக்கிழமை பிற்பகல் சென்றார்.
  சுமார் அரை மணி நேரம் அங்கு பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்துடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தியதாகக்  கூறப்படுகிறது.  
  பின்னர் நடைபெற்ற கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக சஞ்சய் தத் தெரிவித்ததால், வைத்திலிங்கம்தான் வேட்பாளராக இருக்கக் கூடும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
  சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்,  ஏற்கெனவே 1980 முதல் 2006 வரை நெட்டப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 7 முறையும்,  2011,  2016 தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியிலும் வென்று, தொடர்ந்து 9 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  இவரது தாத்தா வைத்திலிங்கம் ரெட்டியார்,  பிரெஞ்சு ஆதிக்கத்தில் புதுவை இருந்த போது நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் மேயராக இருந்தவர். 
  இவரது தந்தை வெங்கடப்ப ரெட்டியார், புதுவை முதல்வராகப் பதவி வகித்துள்ளார். மேலும், பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் புதுவையில் 2 முறை முதல்வராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai