சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் மூலம் மோடி, கிரண் பேடியை ஆட்சியில் இருந்து அகற்ற மக்களுக்கு வாய்ப்பு

  By DIN  |   Published on : 17th March 2019 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெற வைப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமல்ல, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியையும் ஆட்சியில் இருந்து அகற்ற மக்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.
  புதுச்சேரியில் பிரதேச காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நிர்வாகிகளுடன் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் முதல்வர் வே.நாராயணசாமி பேசியதாவது:
  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு ஏராளமான நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆனால், தற்போதைய பாஜக அரசால்  தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
  புதுவையில் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும், ஆளுநர் கிரண் பேடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். எந்தக் கோப்புகளை அனுப்பினாலும் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திருப்பி அனுப்புகிறார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவப் படிப்புக்கான கோப்பை அனுப்பிய போது, அதையும் அவர் திருப்பி அனுப்பிவிட்டார்.
  புதுவையில் வாழும் 17 சதவீத தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்துக்கும் ஆளுநர் கிரண் பேடி தடையாக உள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியின் முகவராகச் செயல்படுகிறார்.
  எனவே, மக்களவைத் தேர்தல் மூலம் பிரதமர் மோடி, ஆளுநர் கிரண் பேடி ஆகியோரை அகற்ற மக்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு, ராகுல் காந்தி அறிவிக்கும் புதுவை தொகுதி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
  பாஜகவின் சர்வாதிகார ஆட்சி-சஞ்சய் தத்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகம் காக்கப்பட்டது. தற்போதைய பாஜக ஆட்சியில் சர்வாதிகாரம்தான் உள்ளது.  மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து பிரதமர் மோடியும், அமித் ஷாவும்தான் பேசுகின்றனர்.
  புதுவையில் மக்களின் நலனுக்காக முதல்வரும், அமைச்சர்களும் ஆளுநர் மாளிகை வாசலில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவானது. அதற்குப் பிறகுதான் சில திட்டங்களுக்கு  ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்தார்.
  கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களிடம் பிரதமர் மோடி நேரடியாகப் பேசியதில்லை. மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மட்டுமே பேசினார். கட்சி நிர்வாகிகளிடம்கூட அவர் காணொலிக் காட்சி மூலம்தான் பேசுகிறார். மக்களின் பிரதமராக இல்லாத நரேந்திர மோடியை, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலம் வீட்டுக்கு அனுப்புவோம் என்றார் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai