தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை சமரசம் செய்ய புதுவை முதல்வர் முயற்சி 

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத் தேர்தல் தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து


புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத் தேர்தல் தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து சமரசம் செய்யும் முயற்சியில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி ஈடுபட்டார்.
கடந்த 2016 -ஆம் ஆண்டு நடைபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சேதுசெல்வம் 2- ஆவது இடத்தைப் பிடித்தார். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் முன்வைப்புத் தொகையை இழந்தன.
இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அசோக் ஆனந்த் தண்டனை பெற்றதால், அவரது பதவி பறிபோனது. காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு, மக்களவைத் தேர்தலுடன் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 2-ஆவது இடம் பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டது.
ஆனால், கூட்டணி சார்பில், அந்தத் தொகுதியில் திமுக போட்டியிடும் என காங்கிரஸ் அறிவித்தது. இதனால், புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். இதன் காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை.
இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள், சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட விரும்புவதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் புதுவை காங்கிரஸார் இறங்கியுள்ளனர். புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் ஆகியோர் அதிருப்தியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை முதலியார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசியக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், கட்சி நிர்வாகிகள் அபிஷேகம், தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல்வர் உள்ளிட்டோர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு சலீம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு என்ற எங்களது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிட விரும்புகிறோம். இதுகுறித்து எங்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோரிடம் வலியுறுத்தினோம்.
தற்போதைய சூழலில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறும் என்றும், இந்த வெற்றி காங்கிரஸ் ஆட்சிக்கும், கூட்டணிக்கும் பலம் சேர்க்கும் என்றும் கூறினோம். இதுதொடர்பாக கட்சி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com