இந்திய கம்யூ. நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் பணிக் குழுவினர் பேச்சுவார்த்தை

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன், திமுக தேர்தல் பணிக் குழு நிர்வாகிகள் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன், திமுக தேர்தல் பணிக் குழு நிர்வாகிகள் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
 தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அசோக் ஆனந்த், சொத்து குவிப்பு வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்றதால், தற்போது அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் ஏப். 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 இந்தத் தொகுதியில் போட்டியிட கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிட்டு 2-ஆவது இடம் பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையே இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக தொழிலதிபர் வெங்கடேசன் அறிவிக்கப்பட்டார்.
 இதனால், அதிருப்தியடைந்த இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கடந்த 2 நாள்களாகத் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 இந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு தீர்மானம் அனுப்பியுள்ளனர். இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் திமுகவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் பணிக் குழு உறுப்பினர்களான எஸ்.பி.சிவக்குமார், இரா.சிவா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில பொறுப்பாளர் அஜிஸ் பாஷா முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
 இதற்கிடையே இரு கட்சிகள் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும், இதுகுறித்து வியாழக்கிழமை உரிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com