நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காதது ஏன்? அதிமுக கேள்வி

மத்தியில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காதது ஏன்? என்று அதிமுக கேள்வி எழுப்பியது.

மத்தியில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காதது ஏன்? என்று அதிமுக கேள்வி எழுப்பியது.
 இதுகுறித்து புதுவை மாநில அதிமுக அலுவலகத்தில், புதன்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், புதுவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. திமுக மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றும் விதத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்ற கோரிக்கையை தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
 மத்தியில் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் திமுக 13 ஆண்டு காலம் பங்கேற்றிருந்தது. அப்போதெல்லாம் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தர எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது மக்களவைத் தேர்தலுக்காக அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 புதுவைக்கு மாநில அந்தஸ்தை பெறுவதில் உறுதியான நிலைப்பாட்டை எப்போதும் அதிமுக எடுத்து வந்துள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் நடைபெற்ற பாஜக கூட்டணி ஆட்சியில் அதிமுக இருந்த போது ஜெயலலிதா புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தினார்.
 இதை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், பின்னர் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் மத்தியில் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் அரசு புதுவையை வஞ்சிக்கும் வகையில், அந்தக் கோரிக்கையை கிடப்பில் போட்டது.
 மத்தியில் ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக இருந்த போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 இந்த நிலையில், ராகுல் காந்தி பிரதமரானால் மாநில அந்தஸ்து வழங்குவோம் என்று முதல்வர் நாராயணசாமி தற்போது கூறுகிறார். இது மக்களை ஏமாற்று செயல்.
 முதல்வர் நாராயணசாமி பொய் வாக்குறுதிகளைக் கூறி, வாக்கு கேட்பதை விட்டுவிட்டு, கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்பதைக் கூறி, வாக்கு கேட்க வேண்டும் என்றார் அன்பழகன். பேட்டியின்போது அண்ணா தொழில்சங்கச் செயலர் பாப்புசாமி உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com