ஐக்கியப் பெருவிழா: பல்லக்கில் காரைக்கால் அம்மையார் வீதியுலா

காரைக்கால் அம்மையார் ஐக்கியப் பெருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு மின்விளக்குகள் அலங்காரப் பல்லக்கில் அம்மையார் வீதியுலா நடைபெற்றது.


காரைக்கால் அம்மையார் ஐக்கியப் பெருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு மின்விளக்குகள் அலங்காரப் பல்லக்கில் அம்மையார் வீதியுலா நடைபெற்றது.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் இறைவனிடம் ஐக்கியமானதைக் குறிப்பிடும் வகையில், ஆண்டுதோறும் ஐக்கியப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
 நிகழாண்டு இவ்விழாவை 2 நாள்கள் நடத்தத்  திட்டமிடப்பட்டு,  சனிக்கிழமை விழா தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக காலையில் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
தொடர்ந்து, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் இல்லத்துக்கு எழுந்தருளி, அமுதுண்டதை நினைவுகூரும் விதமாக கோயில் அருகே உள்ள மணிமண்டபத்தில் நண்பகல் 12 மணியளவில் திருவமுது படைக்கும் அன்னம்பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
பல்லக்கில் வீதியுலா:  விழாவின் சிறப்பு அம்சமாக மின் விளக்குகளாலும், மல்லிகை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் காரைக்கால் அம்மையார் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது, அம்மையாரை வரவேற்கும் வகையில் பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக பூர்ண கும்பம் வைத்து வழிபட்டனர். 
வீதியுலா நிறைவில், கைலாசநாதர் கோயிலில் உள்ள நடராஜர் சன்னிதிக்கு அம்மையார் எழுந்தருளச் செய்யப்பட்டார். அங்கு அம்மையார் இறைவனுடன் ஐக்கியத்தை குறிக்கும் வகையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com