தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: மாவட்டத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

புதுச்சேரியில் தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்டத் தேர்தல் அதிகாரி அருண் எச்சரித்தார்.


புதுச்சேரியில் தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்டத் தேர்தல் அதிகாரி அருண் எச்சரித்தார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையம் புதுவை மக்களவைத் தொகுதிக்கான பொதுத் தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்ததைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் தேர்தல் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஓர் அங்கமாக, தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கணினி மூலம் தற்செயல் கலப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தேர்தல் பணி குறித்த பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 738 வாக்குச் சாவடிகள் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான 27 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குச்சாவடி அதிகாரிகளாக மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3,898 அரசு அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஆணை, பயிற்சி வகுப்புக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், அலுவலர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இருந்து தேர்தல் பணிச்சான்றிதழ் (படிவம் 12பி) பெற்றுக்கொண்டு வாக்குப்பதிவின்போது பணியிலிருக்கும் வாக்குச் சாவடியிலேயே வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தபால் வாக்குப்பதிவுக்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி அதிகாரிகள், அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளன. அதிகாரிகளுக்கான முதல் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து, மார்ச் 24, 25, 26-ஆம் தேதிகளில் அந்தந்த உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிப்பில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
தேர்தல் பணிக்கென அமர்த்தப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகள், அலுவலர்கள் அவரவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணியாணை, அழைப்பாணையின்படி பயிற்சி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அலுவலர்களை அட்டவணைப்படி பயிற்சிகளில் கலந்து கொள்ள ஏதுவாக அவர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
பயிற்சிக்கு வராத பணியாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படியும், துறை ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com