புதுச்சேரியில் சீமான் நாளை தேர்தல் பிரசாரம்
By DIN | Published On : 24th March 2019 05:05 AM | Last Updated : 24th March 2019 05:05 AM | அ+அ அ- |

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுச்சேரியில் திங்கள்கிழமை (மார்ச் 25) தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாக புதுவை மக்களவைத் தொகுதிக்கான அந்தக் கட்சியின் வேட்பாளர் ஷர்மிளா பேகம் கூறினார்.
புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஷர்மிளா பேகம் (30) வெள்ளிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பி.ஏ. (சூழ்நிலையியல்) படித்துள்ள நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை உறுப்பினரான இவருக்கு அந்தக் கட்சி சார்பில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக ஷர்மிளா பேகம் கூறியதாவது: எனது கணவர் நிசார் அகமது, நாம் தமிழர் கட்சியில் மாநில சுற்றுச்சூழல் பாசறைச் செயலராக உள்ளார். தமிழகம், புதுவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் முதல் முறையாக 50 சதவீதம் மகளிருக்கு நாம் தமிழர் கட்சி ஒதுக்கியுள்ளது. அதன்படி, 20 தொகுதிகளில் மகளிர் வேட்பாளர்கள் போட்டியிடுகிறோம்.
புதுவைக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிடவுள்ளோம். இதற்காகவும், தேர்தல் பிரசாரத்துக்காகவும் புதுச்சேரிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை வரவுள்ளார். புதுவையை ஆண்ட காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸால் மக்களுக்கு பயனில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை. மாநிலம் முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்வோம். கிராமப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்துவோம் என்றார் அவர்.